அம்பாறையில் இடையிடையே குறுக்கிடும் மழைக்கு மத்தியில் பெரும்போக நெல் அறுவடை மும்முரம்

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டத்தில் பெரும் போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இடையிடையே பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்ற அறுவடையின் போது இந்த முறை விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு விளைச்சல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் கடந்த வருடங்களில் தொடர் நஷ்டத்தை எதிர்கொண்ட விவசாயிகளுக்கு இம்முறை கணிசமானளவு விளைச்சல் கிடைத்துள்ளது என குறிப்பிட்ட விவசாயிகள், இடையிடையே ஏற்படும் மழைவீழ்ச்சி காரணமாக தற்போது சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக வயல் நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதனால் நெல் அறுவடையில் ஈடுபடுவது சிரமமாக உள்ளது.

அரசு உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்யும் வேலைத் திட்டத்தை நெற்சந்தைப்படுத்தும் சபையின் ஊடாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அக்கரைப்பற்று, சாகாமம், தீக வாபி, நாவிதன்வெளி, பாணம, பொத்துவில், மல்வத்தை போன்ற கொள்வனவு நிலையங்கள் இதற்காகத் திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நாடு, வெள்ளை மற்றும் சிவப்பரிசி இனங்களே அதிகம் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதவிர, அரிசி ஆலை உரிமையாளர்கள், தனியார் வியாபாரிகள் ஆகியோர் விவசாயிகளிடம் இருந்து நெல்லை உடனுக்குடன் கொள்வனவு செய்து வருகின்றனர்.

66 கிலோ நிறையுடைய வெள்ளை மற்றும் சிவப்பரிசி நெல் மூடையொன்று 5,700 முதல் 6,000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெளி மாவட்டங்களில் இருந்து தினசரி அம்பாறை மாவட்டத்துக்கு வரும் வியாபாரிகளும் நெல் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லுக்கான கேள்வி அதி உச்சத்தில் காணப்படுகின்றது.

எனினும் சில இடங்களில் மழை, பனி பொழிவு காரணமாக நெல் ஈரத்தன்மையுடன் காணப்படுவதாகவும், இதனால் குறைந்த விலையில் ஈரமான நெல் கொள்வனவு செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

DCIM100MEDIADJI_0768.JPG