
அமைச்சுப் பதவியென்ற பேச்சுக்கே இடமில்லை – க.சுகாஷ்
இனப்படுகொலையாளிகளான ராஜபக்ஷாக்களைக் காப்பாற்றும் ரணில் விக்கிரமசிங்கவைப் பலப்படுத்த வேண்டிய தேவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு துளியளவும் கிடையாது, என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவியென்ற பேச்சுக்கே இடமில்லை, என தெரிவித்துள்ள அவர் மேலும்,
இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்களால் தமழினத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச விசாரணை கோரும் இத்தருணத்தில், அமைச்சரவையில் அங்கம் வகித்தோ அல்லது அரசாங்கத்தால் நியமிக்கப்படும் அரசைக் காப்பாற்றும் குழுக்களுக்குத் தலைமை தாங்கியோ, அரசாங்கத்தோடு சங்கமிப்பதென்பது ஈழத் தமிழினத்தின் நீதிக்கான பயணத்தை நீர்த்துப்போகச் செய்வதோடு, இனப்படுகொலையாளிகளைப் பாதுகாப்பதாகவே அமையும்.
இந்த துரோகங்களைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் செய்யாதென்பதை, இனவிடுதலைக்காக ஆகுதியாகியவர்களின் ஆத்மாக்களை மனதிருத்தி, பொறுப்போடு கூறுகின்றோம், என தெரிவித்துள்ளார்.
