அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் சவூதி அரேபியாவிற்கு விஜயம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இன்று வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் சவுதி விஜயம், எரிசக்தி விநியோகம், மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ஜனாதிபதி, அங்கு சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ் மற்றும் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
2018ஆம் ஆண்டு ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதன் பின்னர் பாதிக்கப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்த விஜயம் உதவும் என சர்வதேச ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.