அமெரிக்காவில் பனிப்புயல்

அமெரிக்காவின் பல மாநிலங்களில் வீசி வரும் கடும் பனிப்புயல், உறைபனி மற்றும் குளிர் காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது.

நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில் வானிலை அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் பனிப்புயல் தொடர்பான அனர்த்தங்களில் சிக்கி இதுவரை குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், உயிரிழப்பிற்கான துல்லியமான காரணங்களைக் கண்டறிய அதிகாரிகள் இன்னும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடும் பனிப்பொழிவு மற்றும் பனி படிவங்கள் காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் 800,000-க்கும் அதிகமானோர் இருளில் மூழ்கியுள்ளனர்.

இதில் டென்னிசி (Tennessee) மாநிலத்தில் மட்டும் சுமார் 2.5 லட்சம் பேர் மின்சாரமின்றி தவிக்கின்றனர்.

அதேநேரம், அமெரிக்கா முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் நியூயோர்க் நகரம் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.

டெக்சாஸ், ஓஹியோ, டென்னிசி மற்றும் நியூயோர்க் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கனடாவின் டொராண்டோ நகரிலும் வரலாறு காணாத வகையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 46 செ.மீ (18.1 அங்குலம்) பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

இது 1966 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும். இதனால் டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.