அப்பாவின் மனைவிக்கு மகன் கொடுத்த தண்டணை

இந்தியாவில் தேனி மாவட்டத்தில் மகன் தனது தந்தையின் இரண்டாவது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள மணலாத்துக்குடிசை கிராமத்தில் வேல்பாண்டி என்ற விவசாயி மனைவி பழனியம்மாள் மற்றும் இவர்களுடைய 2 மகன்களுடன் வாழ்ந்த வந்த நிலையில் அதே ஊரில் வசித்து வரும் கணவரை இழந்த ஜோதியுடன் வேல்பாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டு 4 ஆண்டுகளுக்கு முன்பு வேல்பாண்டி ஜோதியை 2வது திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு வேல்பாண்டி, ஜோதியுடன் கேரள மாநிலத்துக்கு சென்றார்.

மணலாத்துக்குடிசை கிராமத்தில் பழனியம்மாள் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். இதில் இளைய மகன் ரவிக்குமார் தென்னை மரம் ஏறும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கேரளாவில் வசித்து வந்த வேல்பாண்டி- ஜோதி தம்பதியினர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருசநாடு அருகே பொன்னன்படுகை கிராமத்திற்கு வந்தனர்.

இவர்கள் அங்கு உள்ள ஒரு தென்னந்தோப்பில் தங்கி கூலி வேலை செய்து வந்த நிலையில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை பிற்பகல் வேல்பாண்டி மகன் ரவிக்குமார் தென்னந்தோப்புக்கு சென்ற போது ஜோதி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அவரைக் கண்டதும் ரவிக்குமார், ‘என் அம்மா வாழ்க்கையை கெடுத்து விட்டு நீ மட்டும் சந்தோசமாக வாழ்கிறாயா?’ எனத் தகராறில் ஈடுபட்டார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜோதியை சரமாரியாக வெட்டியதில் ஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் தப்பிக்க முயன்ற ரவிக்குமாரை அக்கம்பக்கத்தினர் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.