அனர்த்த முகாமைத்துவ சட்டத்தில் திருத்தம் அவசியம் – ஜனாதிபதி ஆலோசனை

தற்போதைய நிலைமைகளுக்கேற்ப அனர்த்த முகாமைத்துவ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய அனர்த்த முகாமைத்துவ பேரவையின் 14ஆவது கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று(06) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ திட்டம், அவசரகால செயற்பாட்டுத் திட்டமும் முன்வைக்கப்பட்டு, பேரவையினால் அவை அங்கீகரிக்கப்பட்டன.

அனர்த்தங்களை குறைக்க முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், புதிய போக்குகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டன .

2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையை தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அவசியத்தின் அடிப்படையில் 2005ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்திற்கமைய தேசிய அனர்த்த முகாமைத்துவ பேரவை ஸ்தாபிக்கப்பட்டது.

தற்போதைய காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் அனர்த்த முகாமைத்துவத்தை மேலும் வினைத்திறனாக்குவதன் அவசியத்தையும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் தேவையையும் கவனத்திற்க் கொண்டு காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப தற்போதைய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தேசிய அனர்த்த முகாமைத்துவ பேரவை 07 வருடங்களுக்கு பின்னர் கூடியது .