அனர்த்த பலி எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் இதுவரையில் மொத்தமாக 627 பேர் உயிரிழந்துள்ளதுடன் 190 பேர் காணாமல் போயுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்டங்களைப் பொறுத்தவரை, அதிகளவான உயிரிழப்புகளைப் பதிவு செய்த மாவட்டங்களாக கண்டி (232), பதுளை (90), நுவரெலியா (89), மற்றும் குருணாகல் (61) ஆகியவை காணப்படுகின்றன.

அத்துடன், நாட்டின் 25 மாவட்டங்களை பாதித்த இந்த அனர்த்தங்களால் மொத்தமாக 611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தங்களால் 4,517 வீடுகள் முழுமையாகவும், 76,066 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

அத்துடன், அனர்த்தம் மற்றும் அனர்த்த அபாயம் காரணமாக இடம்பெயர்ந்த 89,857 பேர் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 956 மையங்களில் தங்கியுள்ளனர்.