அனர்த்தத்தில் இருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு வேலைத்திட்டங்களை முடுக்கி விட்டுள்ளோம் – றியாஸ்

எந்தவொரு அனர்த்த நிலையிலும் மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பது மிக முக்கியம். அதற்காக வெள்ள பாதுகாப்பு நிதி ஒன்றை உருவாக்குவதும், தேவைக்கேற்ப திறக்கவும் மூடவும் கூடிய மதகு வாயில் அமைப்புகளை நிறுவுவதும் அவசியமாகும்.

இது பிராந்திய மக்களுக்கு நிலையான பாதுகாப்பை வழங்கும். இந்த பணிகள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். சமூக அமைப்புகள், உள்ளூர் தலைவர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அபிவிருத்தி நிலையானதாக அமையும்.

இதற்கான முறையான வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டு, உரிய அதிகாரிகளின் ஒப்புதலுடன் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தெரிவித்தார்.

சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்குள் அனர்த்த முகாமைத்துவ செயற்குழு (Working Committee) ஒன்றை அமைப்பது தொடர்பான நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.எம்.ஆஷிக் தலைமையில் நேற்று புதன்னிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் இந்த கருத்துக்களை முன்வைத்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

“சாய்ந்தமருது போன்ற கடலோரப் பிரதேசங்களில் இயற்கை அனர்த்தங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மக்கள், அரசு, மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் மக்களின் உயிர் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க முடியும்.

2004 ஆம் ஆண்டு சுனாமி, 2010 வெள்ளம், மற்றும் அண்மையில் 2024–25ல் ஏற்பட்ட வெள்ளம் ஆகிய அனர்த்தங்களில் சாய்ந்தமருது கடுமையாக பாதிக்கப்பட்டது. “இந்த அனுபவங்களே எங்களுக்கான விழிப்புணர்வையும், வலுவான முகாமைத்துவத் திட்டங்களையும் உருவாக்க வழிவகுத்தன.

நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக அதிகாரிகள், அனர்த்த நிவாரண சேவைகளை பொறுப்பாக மேற்கொண்டு வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

உண்மையாகவே அனர்த்த முகாமைத்துவப் பணிகளில் ஈடுபடுவது எமது இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகும். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி முதல் 2010ஆம் ஆண்டு வெள்ளம், மேலும் அண்மையில் 2024–25ல் ஏற்பட்ட வெள்ளம் வரை சாய்ந்தமருது பிராந்தியம் பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது கவனம் தொடர்ந்து இப்பிராந்தியத்திலேயே மையப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், இளைஞர்களை மையப்படுத்தி அனர்த்த அபாயக் குறைப்பு வேலைத்திட்டங்களை 2019 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். அம்பாறை மாவட்டத்தில் இதுவரை 250 இளைஞர்கள் 200 மணி நேர பயிற்சியுடன் உருவாக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, அரசுத் துறைகளில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சிகள் இளைஞர்களின் திறனையும், அவசர நிலைகளில் செயல்படும் திறத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை.

கடந்த 2024 ல் ஏற்பட்ட காரைதீவு சம்பவத்திற்குப் பின்னர், பிராந்திய இளைஞர்களுக்கு “Swimming and Diving” பயிற்சிகள் ஆறு மாத காலம் வழங்கப்பட்டன. அதில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெற்றிகரமாக பயிற்சி பெற்றனர். தற்போது அவர்கள் தேவையான சமயங்களில் கடற்படையுடன் இணைந்து பணிபுரியக்கூடிய திறனை பெற்றுள்ளனர்.

இத்தகைய திறமைகளை விரிவுபடுத்தும் நோக்கில் சாய்ந்தமருதியிலேயே புதிய பயிற்சித் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம். தொடக்கமாக சுமார் 130 பேர் சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசங்களில் இருந்து விண்ணப்பித்துள்ளனர். இப்பயிற்சி கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு, பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மேலும், அவசர நிலை நடவடிக்கைகளில் ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு மற்றும் தகவல் பரிமாற்ற முறைகள் சிறப்பாக செயல்படுதல் அவசியம். கடந்த சில சம்பவங்களில் ஏற்பட்ட தொடர்பு குறைபாடுகள் பெரிய இழப்புகளுக்கு காரணமாகியுள்ளன.

அவை மீண்டும் நிகழாத வகையில் இளைஞர்களுக்கு மீட்பு நடவடிக்கை, நீச்சல், தொடர்பு திறன் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அதனுடன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சமூக மட்டப் பயிற்சிகளும், ட்ரோன் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன உபகரணங்கள் பற்றிய பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.

அண்மையில் நடத்தப்பட்ட டைவிங் பயிற்சியில் பங்கேற்ற இளைஞர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் ஒரு திறமையான, பயிற்சியுற்ற தொண்டர்களை உருவாக்கி, சாய்ந்தமருது பிரதேசத்தை அனர்த்த முகாமைத்துவத்தில் முன்னோடியாக மாற்றுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றும் தெரிவித்தார்.