
அனர்த்தங்கள் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் 1926 இற்கு அழைக்கவும்!
அனர்த்தங்கள் காரணமாக மன அழுத்த நிலைமைகள் ஏற்பட்டிருப்பின், தேசிய மனநல நிறுவகத்தின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
இவ்வாறான அனர்த்த நிலையின் பின்னர் அது எமது மனதை நேரடியாகப் பாதிக்கக்கூடும் எனவும், அதன் காரணமாக மக்களிடையே மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமாகக் காணக்கூடிய ஒன்று எனவும் ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர், பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார்.
நீங்கள் அத்தகைய அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால், முதலில் பிரச்சினையை அடையாளம் காண வேண்டும் எனவும், பின்னர் அந்தப் பிரச்சினைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தீர்வைக் கண்டறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், யாரேனும் இந்த நிலைமை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பின், அருகிலுள்ள அரச வைத்தியசாலையின் மருத்துவரைச் சந்தித்துத் தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் வைத்தியர் அறிவித்துள்ளார்.
பேராசிரியர் மியுர சந்திரதாச மேலும் தெரிவிக்கையில், இந்த அனர்த்தம் காரணமாக பிள்ளைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பின், அவர்களின் வாழ்க்கையை இயன்றவரை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்றார்.
உதாரணமாக, அவர்களுக்கு விளையாடுவதற்கான சூழலை இயன்றவரை உருவாக்கிக் கொடுத்தல், நண்பர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்களைச் செய்ய முடியும் எனவும் வைத்தியர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தால் கோபம் வருதல், தூக்கமின்மை, பசியின்மை, சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும் எனவும் பேராசிரியர் மியுர சந்திரதாச தெரிவித்தார்.
மேலும், எமது நாடு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல இயற்கை அனர்த்தங்களுக்கும் கசப்பான அனுபவங்களிற்கும் முகங்கொடுத்துள்ள போதிலும், மக்களின் ஒற்றுமை, தைரியம் மற்றும் விடாமுயற்சி காரணமாக இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டை கட்டியெழுப்ப முடிந்ததாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர், பேராசிரியர் மியுர சந்திரதாச இது குறித்து மேலும் கூறுகையில்,
“இம்முறை வெள்ள நிலைமை மற்றும் ‘திட்வா’ புயல் காரணமாக பாரிய அனர்த்தம் ஏற்பட்டது. இவ்வாறான அனர்த்த நிலையின் பின்னர் எமது மனதிற்கு முதலில் தோன்றுவது, எமக்கு பெரியதொரு துன்பம் நேர்ந்துவிட்டது என்ற ஆழ்ந்த கவலையாகும். அத்துடன் வெறுமை, நம்பமுடியாத அதிர்ச்சி மற்றும் எதையும் செய்ய விருப்பமில்லாத நிலையும் ஏற்படலாம். இந்த அனர்த்த நிலை காரணமாக நீங்கள் துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகியிருப்பின், உங்களுக்காக உதவுவதற்கு இலங்கையில் உள்ள அனைவரும் தயாராக உள்ளனர். எனவே, உங்கள் முயற்சியையும் எதிர்காலம் மீதான நம்பிக்கையையும் கைவிட வேண்டாம். வீடு இழந்திருந்தாலும், குடும்பத்தில் ஒருவரை இழந்திருந்தாலும்.. உங்கள் மனதில் உள்ள நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள்,” என்று தெரிவித்தார்.
