அநாதையாக காணப்படும் யாழ். தனியார் பேருந்து நிலையம்: அமைச்சர் கவலை

அதிக செலவில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையம் அநாதையாக காணப்படுகின்றது என கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை தனியார் போக்குவரத்து துறையினரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தினர் பல்வேறு பிரச்சினைகளை எமக்கு எடுத்துக் கூறியிருந்தனர். அதில் முக்கியமானது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய போக்குவரத்தாகும். அந்த போக்குவரத்து பிரச்சினை என்பது, இலங்கை போக்குவரத்து சபைக்கும் தனியார் போக்குவரத்து துறைக்கும் இடையே முரண்பாடாக மாறி வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் அதிக செலவில் ஒரு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அது இன்றைக்கு ஆளில்லாத அநாதையாக்கப்பட்ட இடமாக உள்ளது. ஆகையால் அதனை மாற்றியமைக்க வேண்டிய தேவை எல்லோருக்கும் உள்ளது.

அந்த தேவையை முதன்மைப்படுத்தியதாகவே யாழ்ப்பாணம் மாவட்ட தனியார் போக்குவரத்து துறையினரின் கோரிக்கை அமைந்துள்ளது. அது அவர்களின் கோரிக்கை மாத்திரம் அல்ல, அதனை அனைவருடைய கோரிக்கையாகவே நாங்கள் பார்க்கிறோம்.

எதிர்வரும் காலங்களில் இது குறித்து இங்கிருக்கின்ற பிராந்திய போக்குவரத்து ஆணையாளர்களோடு பேச்சுவார்த்தை நடாத்தி, அவர்கள் ஏன் இவ்வளவு தாமதப்படுத்தினார்கள் என்ற கேள்வி கேட்க வேண்டிய தேவை உள்ளது. அதுபோல எங்களது ஆளுநருக்கும் இது குறித்து தெரியப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

இந்த பிரச்சனையை கலந்துரையாடல் மூலம் சுமூகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என நாங்கள் நினைக்கின்றோம். அதுவும் சாத்தியமாகாத பட்சத்தில் இது குறித்து நேரடியாக போக்குவரத்து அமைச்சரோடு கலந்துரையாடி இதற்கு நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொடுப்போம்  என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்