அதிக சீனியை உட்கொள்ளும் இலங்கையர்கள்!
மேல் மாகாணத்தில் ஐந்து பேரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக தெரிவித்துள்ளார்.
அதிகபடியான சீனி நுகர்வு காரணமாகவே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மருத்துவ சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போது, வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், இருதய நோய் மற்றும் இரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை, தொற்றா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதுடன், இதன் காரணமாக மாத்திரம் 80 சதவீதமான உயிரிழப்புகள் பதிவு செய்யப்படுவதாகவும் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அதிகபடியான சீனியை உட்கொள்ளும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாகவும், தனி நபரொருவர் வருடமொன்றில் 25 முதல் 30 கிலோகிராம் வரை சீனியை உட்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, சிறுவர்களிடையே சீனி நுகர்வு அதிகரித்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் மருத்துவ நிபுணர் சுரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிறுவர்கள் நாளொன்றுக்கு 20 தேக்கரண்டி சீனியை உட்கொள்வதாகவும், இந்த நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
