
அட்டை பண்ணையார்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் மற்றும் வடக்கு ஆளுநரிடையே கலந்துரையாடல்!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், கடலட்டைப் பண்ணைகளுக்காக அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள குத்தகைக் கட்டணத்தைச் செலுத்துவதில் தாங்கள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் பண்ணையாளர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்தக் குத்தகைக் கட்டணத்தைக் கணிப்பிட்டபோது, கடலட்டையின் சர்வதேச சந்தை விலை வீழ்ச்சி கருத்தில் கொள்ளப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர்கள், தற்போதைய சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு பொதுவான சூத்திரமொன்றின் ஊடாகக் கட்டணத்தை மீளக் கணிப்பிடுமாறும், அதிகரிக்கப்பட்டுள்ள குத்தகைக் கட்டணத்தைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர்,
தற்போதைய கட்டணங்கள் கணிப்பிடப்பட்ட உத்தியோகபூர்வ முறைமை தொடர்பில் பண்ணையாளர்களுக்குத் தெளிவுபடுத்தினர். அத்துடன், கடலட்டைப் பண்ணையாளர்களின் இந்தக் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, மதிப்பீட்டு நடைமுறையை மீண்டும் பரிசீலனை செய்வது தொடர்பில் உரிய துறைசார் அதிகாரிகளுடன் விரைவில் கலந்துரையாடி ஆவன செய்வதாகப் பதிலளித்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் மற்றும் யாழ். மாவட்டக் கடலட்டைப் பண்ணையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
