
அடைமழையால் அம்பாறை விவசாயிகள் கடும் நெருக்கடியில்!
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர் தெரிவித்துள்ளார்.
அவரின் ஊடக அறிக்கையில் மேலும்,
அறுவடை செய்யப்பட்ட நெல் மழையால் உரிய முறையில் உலர்த்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக நெல் முலை விடத் தொடங்கியுள்ளதுடன், பெருமளவிலான விளைச்சல் பயன்பாடற்றதாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வேளாண்மை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“கடந்த அரசாங்கங்கள் செய்தது போல, ஈர நெல்லை கிலோ 100 ரூபாய்க்கு அரசாங்கம் உடனடியாக கொள்வனவு செய்திருந்தால் இவ்வாறான இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும். தற்போதைய அரசாங்கம் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்யத் தவறியதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்” என அவர் குற்றம் சாட்டினார். மேலும் தற்போதைய அரசாங்கம் ஈர நெல்லை விவசாயிகளிடமிருந்து உடனடியாக கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தனார்.
தற்போதைய அவசரநிலையை கருத்தில் கொண்டு, அனுர குமார திசாநாயக்க மற்றும் கே.டி. லால் காந்த ஆகியோர் நேரடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எம்.ஏ. நளீர் வலியுறுத்தினார்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், அரசாங்கம் அவசர நிவாரண திட்டம் ஒன்றை அறிவித்து, ஈர நெல் கொள்வனவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
