அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் கைது!
பத்தரமுல்லை – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
காலி – அம்பலாங்கொடையில் வைத்து குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அக்குரேகொட பகுதியில் வைத்து கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்களால் குறித்த சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
முன்னதாக கொலையாளிகளுக்குப் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொடுத்ததாகக் கருதப்படும் நான்கு பேரை பொலிஸார் கைது செய்தனர்.
காலி, கஹதுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உள்ளடங்குவர். அவர்களிடமிருந்து இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில், இந்த கொலையில் நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய முக்கிய சந்தேக நபர் தற்போது விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
