அக்கரப்பத்தனை நகரத்தின் பொது மலசலகூடத்தின் நிலை : பிரதேச சபை தலைவரின் கவனத்திற்கு!

-மஸ்கெலியா நிருபர் –

அக்கரப்பத்தனை நகரத்தின் பொது மலசலகூடம் பல வருடங்ளாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அசௌகரியமான நிலையில் இருந்து வருகிறது.

பொதுமக்களின் பொது சுகாதாரத்திற்கு பெறும் அச்சுறுத்தலான இந்த பிரச்சினையை இதுவரையில் கண்டுக்கொள்ளாதது ஏன்?

நடப்பு பிரதேச சபை ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னர் பிரதேச சபை ஸ்தாபிக்கப்படாததை காரணம் காட்டியே முறையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

தற்போது பிரதேச சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதும் இந்த பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு அக்கரப்பத்தனை பிரதேச சபை முறையான நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பது பொதுமக்களிடையே பெறும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்கரப்பத்தனை நகரம் அக்கரப்பத்தனை பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் இருக்கும் பிரதான நகரமாகும், தினமும் பல பிரதேசங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வந்து செல்கின்றனர்.

அது மாத்திரமல்லாமல் பாடசாலைகள்,மிருகவைத்திய நிலையம் மதஸ்தலங்கள், வங்கிகள் மற்றும் தபால் அலுவலகம் என மக்களின் பிரதான தேவைகளை பூர்த்தி செய்கின்ற நகரமாக அக்கரபத்தனை நகரம் இருக்கின்றது.

தினமும் வருகின்ற ஆயிரக்கணக்கான மக்களில் சிறுவர்கள்,முதியோர்கள்,கர்ப்பிணி தாய்மார்கள்,பெண்கள், நோயாளர்கள் என பலரும் உள்ளடங்குவர் .

1. இவர்களின் அவசர கழிவகற்றல் தேவைகளுக்காக இந்த மலசலக்கூடத்தை பயன்படுத்த முடியுமா? அப்படி அவசரத்திற்காக பயன்படுத்துபவர்களுக்கு இந்த மலசலக்கூடத்தினால் வேறு ஏதாவது நோய் நிலைமைகள் ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு கூறுவது யார்?

2. அப்படி தனது அவசர மலசலக்கூட தேவைகளுக்காக இந்த மலசலக்கூடத்தை பயன்படுத்தமுடியவில்லையாயின் -அவர்களின் நிலைமை என்னவாகும்?

3. Clean sri lanka திட்டம் இங்கு நடைமுறைப்படுத்தப்படாததற்காக காரணம் என்ன?

4. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் உள்ளூராட்சி வாரம் நிகழ்ச்சித்திட்டங்களில் இது போன்ற மிக முக்கியமான மக்களின் பொது தேவைகள் கண்டுக்கொள்ளப்படாதது ஏன்?

5. அக்கரப்பத்தனை வட்டார பிரதேசசபை உறுப்பினர் மக்களுக்கு சேவையாற்றுகிறாரா? அல்லது பதவி நித்திரையில் உறங்கிக்கொண்டிருக்கிறாரா?

6. அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு இந்த பிரச்சினை இருப்பது தெரிந்தும், ஏன் முறையான தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லை?

இந்த பிரச்சினைக்கான முழுமையான பொருத்தமான தீர்வினை விரைவில் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.