அக்கரப்பத்தனையில் நடமாடும் சேவை : மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு!

-நுவரெலியா நிருபர்-

அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் அன்றாட சிரமங்களை குறைத்து, அவர்களுக்கான சேவைகளை நேரடியாக வழங்கும் நோக்கில் தலவாக்கலை பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை இன்று வியாழக்கிழமை மன்றாசி நிசாந்தனி மண்டபத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி தலைமையேற்றார். அவருடன் தலவாக்கலை பிரதேச செயலக செயலாளர், அக்கரப்பத்தனை பிரதேச சபை பிரதி தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மக்களின் அத்தியாவசிய தேவைகளை முன்னிறுத்தி, அஸ்வெசுமு கொடுப்பணவு, முதியோர் கொடுப்பணவு, பிறப்பு சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, சுகாதாரம், காணி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு நிகழ்விடத்திலேயே தீர்வுகள் வழங்கப்பட்டன.

பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டு தங்களின் சிக்கல்களை முன்வைத்தனர். நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்கள் பலர், “சாதாரணமாக அலுவலகங்களுக்கு சென்று இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பது சிரமமானது. ஆனால் இன்று இந்நிகழ்வின் வாயிலாக எங்கள் சிக்கல்கள் உடனடியாக தீர்க்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வு, தோட்ட மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டு, அதற்கான தீர்வுகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்ததோடு, பிரதேச மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.