வாழைச்சேனையில் உலக காசநோய் தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்-

‘உலக காசநோய் தினம் மார்ச்-24’ தொடர்பான விழிப்புணர்வு நிழகழ்வுகள் மட்டக்களப்பு வாழைச்சேனை அதார வைத்தியசாலையில் நடைபெற்றது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் காசநோய் கட்டுப்பாட்டு பிரிவு ஓட்டமாவடி, மற்றும் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது காசநோயில் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாழைச்சேனை மீன் பிடித் துறைமுகப் பகுதியில் இருந்து பிரதான வீதி வழியாகவும் மற்றையது ஓட்டமாவடி பிரதான வீதி வழியாக வந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையை சென்றடைந்தது.

ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் “காசநோய் என் வாழ் நாளில் இல்லாது ஒழிப்போம்” என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

அத்துடன் காச நோயில் இருந்து மக்கள் பாதுகாப்பு பெறுவது தொடர்பான அறிவித்தல் ஒலி பெருக்கி சாதனத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது.

இவ் ஊர்வலத்தில் பிரதேச வைத்தியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார சேவை உத்தியோகஸ்த்தர்கள், பாடசாலை மணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தின் இறுதியில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காசநோயின் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு உரைகள் அதிதிகளாக கலந்து கொண்ட வைத்தியர்களினால் உரையாற்றப்பட்டது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன், காசநோய்க்கான விசேட வைத்திய நிபுனர் நாலங்க கொடவெல, மார்பு தொற்று நோய் பொறுப்பதிகாரி வைத்தியர் ஆரனி மற்றும் பிரதேச வைத்தியர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்.