வறுமையின் காரணமாக பெண்கள் போதைப்பொருளை விற்கிறார்கள்: சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன்

-திருகோணமலை நிருபர்-

உரிமை சார் செயற்பாடுகளில் இளம் தலைமுறையினரை வலுவூட்டும் விதத்தில் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்பாடு செய்த வதிவிட பயிற்சி பட்டறை நேற்று சனிக்கிழமை இடம் பெற்ற போது திருகோணமலை மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தற்போது போதைப் பொருளை விற்கும் முயற்சியில் வறுமை கோட்டுக்குள் உள்ள சில பெண்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இலங்கையை பொறுத்தவரையில் ஒவ்வொரு வருடமும் போதைப் பொருளுடன் தொடர்புடைய கைதிகள் அதிகரித்துள்ளது.

தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினால் வருடாந்தம் வெளியிடப்பட்டு வருகின்ற அறிக்கையின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டை விடவும், 2021 ஆம் ஆண்டு 13 வீதத்தால் போதைப் பொருளுடன் தொடர்புடைய கைதிகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் ஐஸ் போதை பொருள் பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழ்கின்ற வறிய மக்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது .

இந்த போதைப் பொருள் பாவனை மாத்திரமல்லாது போதைப் பொருளினை விற்பனை செய்கின்ற வீதமும் அதிகரித்துள்ளதுடன் இபெண்கள் அதிகளவில் கைது செய்யப்படுகின்றமை அதிகரித்துள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.