யாழில் பல பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் தொகுப்பு

-யாழ் நிருபர்-

அரசிற்கு எதிராக இன்று ஊர்காவற்துறை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ‘மருந்துக் தட்டுப்பாட்டை நீக்கு, உயிர் தியாகம் செய்ய வைக்காதே, நோயாளிகளை காப்பாற்று என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று யாழ்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இப் போராட்டமானது யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் ஆரம்பிக்கப்பட்டு மல்லாகம் சந்தி ஊடக சென்று சுன்னாகம் பேரூந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொடும்பாவியை வீதியில் இழுத்து சென்று சுன்னாகம் பேரூந்து நிலையத்தில் தீ மூட்டி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்போதய அரசாங்கம் வீட்டுக்கு செல்லவேண்டும் எனவும் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்று  அரசுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளரின் ஏற்பாட்டில் நல்லூரில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று, அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்று வட்டுக்கோட்டை – வழக்கம்பரை பகுதியில் இடம்பெற்றது.

இப் போராட்டமானது வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டது.

வழக்கம்பரை அம்மன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பித்த இப் போராட்டமானது பேரணியாக சென்று சங்கானை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் நிறைவுற்றது.

பதாதைகளை ஏந்தியவாறு அரசினை பதவி விலகுமாறு கோரி, அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க