மூத்த எழுத்தாளர் தெணியான் காலமானார்
மூத்த எழுத்தாளர் தெணியான் (க.நடேசு) இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வடமராட்சி பொலிகண்டியில் தனது 80 வது வயதில் காலமானார்
1964இல் ‘விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’ எனும் சிறுகதையுடன் இவரது எழுத்துலகப் பிரவேசம் ஆரம்பமானது. பிற்படுத்தப்பட்ட , சாதிய ஒடுக்குமுறைக்குள்ளான சமூகத்தின் குரலாக ஒலித்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான்.
பொலிகண்டி கிராமத்தின் ’தெணி’ என்னும் பகுதியில் சந்ததி சந்ததியாகப் பல காலம் வாழ்ந்துவந்த இவரது குடும்பத்தவர்களை ஊரவர்கள் ’தெணியார்’ என அழைக்கும் வழக்கம் இருந்தமையால், ’தெணியான்’ என்ற புனைபெயரையே இவரும் தமதாக்கிக்கொண்டார்.
சுமார் 150 சிறுகதைகள், 30 கவிதைகள், 8 நாவல்கள், 3 குறுநாவல்கள், 5 வானொலி நாடகங்கள், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், விமர்சனங்கள், செவ்விகள் என்பன இவரது படைப்புலக அறுவடைகள்.