மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

-மன்னார் நிருபர்-

மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு வட மாகாண ரீதியாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று சனிக்கிழமை  காலை 10 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதல் நாளான இன்று  சனிக்கிழமை காலை குறித்த போட்டியை மன்னார் மறைமாவட்டத்தின் முன்னை நாள் குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் வைபவ ரீதியாக குறித்த போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த இரு நாள் சுற்றுப்போட்டியில் 10 கழகங்கள் கலந்து கொள்ள உள்ளது.

இன்றைய முதல் போட்டியில் மன்னார் மற்றும் பூநகரி விளையாட்டு கழகங்களுக்கு இடையில் இடம் பெற்று வருகின்றது.

இறுதி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  மாலை 4 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெறும்.

குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்து நாயகம் அடிகளார், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.