மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி
இந்தியா-கர்நாடகத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரச பாடசாலைகளில் கடந்தாண்டு ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவிகள் பரீட்சை எழுத அனுமதிக்கப்படாததால் மாநிலம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.
இதனிடையே, சில மாணவர்கள் காவித் துண்டு அணிந்து வந்து ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கல்வி நிறுவனங்களில் சீருடையை தவிர பிற ஆடைகள் அணியக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கர்நாடகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா, கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாணவிகள் ஹிஜாப் அணியலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கர்நாடக பரீட்சை ஆணையம் நடத்தும் அனைத்து பரீட்சையிலும் பரீட்சை அறைகளில் பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.