மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வு

-மன்னார் நிருபர்-

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெலின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.காதர் மஸ்தான், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன், கே.திலீபன், அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், இராணுவம், பொலிஸ், கடற்படை அதிகாரிகள் மற்றும் துறை சார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கலந்துரையாடலில் மீன்பிடி, விவசாயம், கால்நடை, கல்வி, சுகாதாரம், உள்ளூராட்சி திணைக்கள, கூட்டுறவு, மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், நீர் வளங்கள், அபிவிருத்தி செயற்பாடுகளின் தற்போதைய நிலை, பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை, பின்தங்கிய கிராமங்களில் இருந்து உரிய போக்குவரத்து வசதி இல்லாமையினால் மாணவர்களும், ஆசிரியர்களும் பாடசாலைக்கு சென்று வருவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து உரிய அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

மாணவர்கள், ஆசிரியர்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு மன்னார் மாவட்ட செயலாளர் தலைமையில் தனியார் மற்றும் அரச போக்குவரத்து சபையினருடன் கலந்துரையாடலை மேற்கொண்டு தீர்வுகள் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.