மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவன்

இந்தியாவில் மனைவி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கலைஞர் காலனி பகுதியை சேர்ந்தவர் ( வயது – 30 ) சந்தனகுமார் என்கிற விவசாயியே தனது மனைவி( வயது – 25 ) கௌசல்யா மீது இவ்வாறு நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சந்தனகுமார் வேலைக்கு சென்று வீட்டிற்கு வரும் போது, அடிக்கடி மது போதையில் வந்துள்ளார்.இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர்கள் குடியிருக்கும் பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதனை காரணமாக வைத்து கணவன் சந்தனகுமார் மது அருந்தி வந்துள்ளார்.

அப்போது, கௌசல்யா நல்ல நாள் நடக்கும்போது இப்படி குடித்துவிட்டு வரலாமா என்று கேட்கவே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் போதையின் உச்சியிலிருந்த குறித்த நபர் தான் வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை மனைவியின் தலையில் வீசியுள்ளார்.

இதனால் கௌசல்யா மீது வெடிகுண்டு வெடித்து பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அருகாமையில் இருந்த பொருள்களும் சேதமடைந்தன.

அருகிலிருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது கௌசல்யா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு முதற்கட்ட சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பொலிஸார் சந்தனகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்