மட்டு. நகர மாணவர்கள் ஞாயிறு,இரவு நேர வகுப்புக்கள் வேண்டாம் என வலியுறுத்தல்:மாநகர முதல்வர் தெரிவிப்பு

சிறுவர்கள், மகளிரின் முன்மொழிவைக் கொண்ட சிறந்த பாதீட்டினை உருவாக்கும் நோக்குடன் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையில் கலந்துரையாடல் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

சிறுவர் சிநேக மாநகரமான எமது நகரத்தில் பிள்ளைகளின் ஆலோசனைகளைப் பெற்று பாதீடுகள் தயாரித்து வருகின்றோம் என இந்த கலந்துரையாடலில் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இக் கலந்துரையாடலில் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு சிறுவர் பூங்கா, உடற்பயிற்சி நிலையம், என பல முக்கிய தேவைகளை அவர்கள் முன்மொழிந்த போதிலும் பிரதானமாக முக்கியமான வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

“ஞாயிறு தினங்களில் பிரத்தியேக வகுப்புக்கள் வேண்டாம்” இரவு நேரங்களிலும் வகுப்புக்கள் நடத்த வேண்டாம் என்பதே என்பதுதான் மாணவர்களின் இன்றைய கலந்தரையாடலில் பிரதான வேண்டுகோளாக இருந்துள்ளது.

இரவு நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதால் தமக்கு பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படுவதாக பெண் மாணவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது மாணவர்களின் ஓய்வு நேரம் என்பது குறைந்து அவர்கள் படிப்புடன் மாத்திரம் சுருங்கி சமூகத்துடன் தொடர்பை குறைத்து சமூகமயமாக்கலில் இருந்து விடுபட்டு விட்டனர். இதனால் உளவியல் பூரணத்துவம் அவர்களுக்கு இல்லாமல் செல்ல சவால்களுக்கு முகம் கொடுப்பது கடினமான காரியமாகியுள்ளதால் மாணவர்கள் மத்தியில் தற்கொலை அதிகரிப்பிற்கு காரணமாகி விட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மாணவர்கள் மத்தியில் பரவலாக விடுக்கப்பட்ட “ஞாயிறு வகுப்பு தவிர்ப்பு, இரவு நேர வகுப்பு தவிர்ப்பு” வேண்டுகோள்களை நடைமுறைப்படுத்தும் போது , இதற்கு பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்தும் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரமே இதனை நடைமுறைப்படுத்தி எமது எதிர்கால சமூகத்தை சிறந்த முறையில் உருவாக்க முடியும் என தான் நம்புவதாக முதல்வர் தன முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.