மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் ஜஸ்டினா முரளிதரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு மட்/ஆனைப்பந்தி இந்து மகளிர்கல்லூரி மற்றும் கோட்டைமுனை கனிஸ்ர வித்தியாலயம் ஆகியவற்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் இன்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன் போது கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 15,900 குடும்பங்களை சேர்ந்த 49,123 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 56 தற்காலிக முகாம்களில் 2,558 குடும்பங்களை சேர்ந்த 7,241 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை உறவினர்களின் வீடுகளிலும் தங்களது சொந்த வீடுகளிலும் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இது வரையிலும் எந்தவொரு உயிர் சேதங்களும் பதிவாகவில்லை எனவும் இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானபடையினர் இணைந்து தற்போது வரையிலும் மீட்புபணிகளில் ஈடுபட்டு கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.