Sri Lanka Tamil News Site

மட்டக்களப்பு மாணவனின் “மரணம் விட்டுச் சென்ற செய்தி” ? -ஒலிப்பதிவுகள் இணைப்பு-

- Advertisement -

சுவிட்சர்லாந்திலிருந்து  – ச.சந்திரபிரகாஷ் –

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்ற மாணவனின் உயிரிழப்பு பல்வேறு சந்தேகங்களுடன் , மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது சேறுபூசும் வகையில் சிலருடைய முகநூல் பதிவுகள் இருந்ததை கடந்த ஒருவார காலமாக காணக்கூடியதாக இருந்தது.

சமூக ஊடகங்களில் வெளிவரும் பதிவுகளுக்கு அப்பால் ” ஊடகம் என்ற முறையில்”  உண்மைகளை வெளிக்கொண்டு வருவது தார்மீக கடமை என , எமது இணையதளத்தில் கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தோம்.

கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து ஒருவாரகால தகவல் சேகரிப்பில். கூட்டம் இடம்பெற்ற மண்டபத்தில் உடனிருந்த பெற்றோர் , சக மாணவர்கள் , உறவினர்கள் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோரின் பதிவுகள் மூலம்  மாணவனின் மரணத்திற்கும் , கல்வி அதிகாரிகளுக்கும் எவ்விதமான நேரடித் தொடர்புகளும் இல்லாவிட்டாலும் , இவர்களுடைய கல்வித்திட்டத்தில் உள்ள ஒரு குறைபாடு மாணவனை தற்கொலைக்கு துண்டியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

மாணவனின் மரணத்திற்கு கல்வி பொறிமுறையில் உள்ள குறைபாடுகள் ஒரு காரணம் என்பதை வெளிப்படையாக பெற்றோர்கள் தெரிவித்துள்ள நிலையில் ,  “பாடசாலையின் நிர்வாகம் மாணவனின் விடயத்தில் மனிதநேயத்துடன் நடந்து கொள்ளவில்லை எனவும்” ,  “மாணவர்கள் பாடசாலைக்கு விரும்பி செல்லும் ஒரு சூழ்நிலை இங்கு இருக்கவில்லை”  என்பதையும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் இனி இச்சம்பவம் தொடர்பாக எமது பார்வையை செலுத்துவோம்.

மட்டக்களப்பு மட்டிக்களி பகுதியை சேர்ந்த சுதாகரன் வர்ஷனன் (வயது -19) என்பவரே கடந்த வெள்ளிக்கிழமை அலறி விதையை உட்கொண்டு உயிரிழந்த நிலையில் , இவருடைய இறுதிக்கிரிகைகள் கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் மீதும் , ஏனைய சில கல்விசார் அதிகாரிகள் மீதும் சமூக ஊடகங்கள் வாயிலாக சேறுபூசும் நடவடிக்கையில் சிலரின் பொறுப்பற்ற முறையிலான பதிவுகளை காணக்கூடியதாகயிருந்தது.

 

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற போது கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த குறித்த பிரிவில் கல்வி கற்கும் ஒரு மாணவனின் தாயாரின் கருத்துப் பதிவு இவ்வாறு இருந்தது…..

- Advertisement -

மேலும் இப்பாடசாலையின் பழைய மாணவனும் , இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாணவனின் தந்தை ஒருவரின் கருத்து இன்னும் பல தகவல்களை தெரிவிக்கின்றது……

 

இது ஒருபுறமிருக்க பெற்றோர் ஆசிரியர் கூட்டம் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் , பாடசாலையில் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அதிபர் வர்ஷனனை அழைத்து வரும்படி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து , தாயார் மகனை அழைத்து வரும்படி தந்தையிடம் தெரிவித்துள்ளார். இந்த முயற்சியே இந்த விபரீதமான தற்கொலைக்கு துண்டியுள்ளது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

மாணவனின் மரணத்திற்கு முழுப்பொறுப்புடையவர்கள் பாடசாலையின் நிர்வாகத்தினர் என , பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் தெரிவித்திருந்த நிலையில் பாடசாலையின் அதிபர் ஆர்.பஸ்கரனின் கருத்து இவ்வாறு இருந்தது…..

 

இந்தநிலையில் நண்பர்களிடம் தான் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள கூட்டத்திற்கு செல்லப் போவதில்லை என , முதல் நாள் ஊரணியில் நடக்கும் வழமையான தனியார் வகுப்பில் வைத்து தனது நண்பனிடம் வர்ஷனன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இவருடைய நண்பனின் பதிவு …….. ( நண்பனின் வேண்டுகோளுக்கு இணங்க ஒலிப்பதிவு ஒலிமாற்றம் செய்யப்பட்டுள்ளது).

இந்தநிலையில், பெற்றோர் இக்கூட்டத்திற்கு கூட்டிச்சென்றால் தான் அவமானப்படுவேன் , இந்த அவமானத்தை எதிர்வரும் நாட்களில் தன்னால் சகித்துக்கொள்ள முடியாத நிலையில் தந்தையார் வீட்டிற்கு வரும் முன்னர் அலறி விதைகள் சிலவற்றை அரைத்து குடித்துள்ளதாக அயலவர் ஒருவர் தெரிவித்தார்…….

 

உடலில் நஞ்சு கலந்த நிலையில் கூட்டத்திற்கு சென்ற மாணவன் கல்வி அதிகாரிகளின் சிலகேள்விகளுக்கு அடக்கமான முறையில் பதிலளித்து தனது கையில் இருந்த தலைக்கவசத்தினூள் வாந்தியெடுத்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பதற்கு முன்னர் குறித்த மாணவனால் சக நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒரு பதிவினையும் அனுப்பியிருந்தார். நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இதை நாம் வெளியிடவில்லை.

இந்த நிலையில் உயிரிழந்த மாணவனின் உடலில் தந்தையால் தாக்கப்பட்ட அடையாளங்கள் இருந்ததாகவும், படிப்பு விடயத்தில் பெற்றோர் அதிக அழுத்தங்களை மாணவன் மீது திணித்ததாகவும் சில இளம் சமூகத்தின் முகநூல் பதிவுகளில் காணக்கூடியதாக இருந்தது.

இது தொடர்பாக விசாரணைகளை நடத்திய திடீர் மரண விசாரணை அதிகாரியான தம்பிப்பிள்ளை தவக்குமாரின் பதில் இவ்வாறு இருந்தது….

 

இந்த மாணவனின் மரணத்தை வெறும் சம்பவமாக பார்க்காமல் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் அதிகாரிகள் சரித்திரமாக பார்க்க வேண்டும். தான் மரணித்தாலும் ஏனைய மாணவர்களை இவ்வாறு மனஉளைச்சலுக்கு உள்ளாக்காதீர்கள் என்பதுதான் இவர் விட்டுச் சென்றுள்ள செய்தியாக உள்ளது.

எனவே இந்த சம்பவத்தை சிலநாட்களில் மறந்துவிடும் சுடலை ஞானமாக பார்க்காமல் எதிர்காலத்தில் மாணவர்களின் மனநிலையை புரிந்த கொண்டு கல்வி செயற்பாட்டை கல்விசார் அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் மாணவர்கள் , பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!