புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி இணக்கம்

புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து விலகிய 11 சுயாதீன கட்சிகளுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட 11 கட்சிகள் அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகி, நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் வரை நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்க தீர்மானித்தன.

இந்நிலையில், அனைத்துக் கட்சிகளின் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஆலோசிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அனைத்து அரசாங்க கட்சிகளின் கூட்டத்துடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.