பரீட்சார்த்த சோதனை வெற்றி
இந்தியாவின் முதலாவது உள்நாட்டு தயாரிப்பு பயிற்சி விமானமான ‘ஹன்சா-என்.ஜி’ கடல் மட்ட பரீட்சார்த்த சோதனையைப் புதுச்சேரியில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் தேசிய விண்வெளி ஆய்வுகூடம் என்பன இணைந்து வடிவமைத்து உருவாக்கியுள்ள இந்த விமானம் மணிக்கு 155 கிலோ மீற்றர் வேகத்தில் பங்களூரில் இருந்து பயணித்து 140 கடல் மைல் தூரத்தை ஒன்றரை மணி நேரத்தில் கடந்து புதுச்சேரியை அடைந்தது என்று தேசிய விண்வெளி ஆய்வுகூடம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சோதனையின் போது விமானத்தின் விமானிகளாக விங் கொமாண்டர் கே.வி பிரகாஷ், விங் கமாண்டர் திலீப் ரெட்டி ஆகியோர் பணியாற்றினர். தேசிய விண்வெளி ஆய்வுகூடத்தின் அறிக்கையின்படி, ஹன்சா என்.ஜி பயிற்சி விமானமானது அதிநவீன தொழில்நுட்ப டிஜிட்டல் கட்டுப்பாட்டு இன்ஜின் மூலம் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியா விமானக் கழகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விமானம், குறைந்த செலவு மற்றும் குறைந்த எரிபொருள் பயன்பாட்டைக் கொண்டுள்ளது.
அதனால் வர்த்தக விமான உரிமத்திற்கு சிறந்ததொரு விமானமாக இது விளங்குகிறது. இது தொடர்பில் தேசிய விண்வெளி ஆய்வுகூடத்தின் பணிப்பாளர் ஜிதேந்திர ஜே ஜாதவ், ‘இவ்வாறு 37 விமானங்கள் 50 மணிநேர காலப் பயணங்களை நிறைவு செய்துள்ளன’ என்றார்.