பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மசோதா அவசியமில்லை

-கிண்ணியா நிருபர்-

தற்போது பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மசோதா பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட வேண்டும் என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட பள்ளி வாசல்கள் சம்மேளன செயலாளருமான எம். எம். மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

கிண்ணியாவில் உள்ள திருகோணமலை மீடியா போர ஊடக மையத்தில் இன்று சனிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மசோதா ஏன் கொண்டு வரப்பட இருக்கின்றது? இதனால் இந்த நாட்டிற்கு ஏற்படப் போகின்ற நன்மைகள் என்ன? என வினாக்களையும் எழுப்பினார்.

நாட்டிலே பயங்கரவாதம் என்ற ஒன்று இல்லாமல் இருக்கின்ற போது இவ்வாறான ஒரு மசோதா அவசியம் அற்றது எனவும் அதனால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை எனவும் கூறினார்.

ஏப்ரல் 21 ஈஸ்டர் தற்கொலை தாக்குதலுக்காக கைது செய்யப்பட்ட எத்தனையோ முஸ்லிம் தலைமைகளும் அறிஞர்களும் அநியாயமாக கைது செய்யப்பட்டு தற்போதும் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான கைதுகளினால் இந்த நாடு கண்டுகொண்ட நன்மைகள் எதுவுமே இல்லை. மாறாக அரசியல் இலாபங்களையே பெற்றுக் கொண்டார்கள்.

பொருளாதாரத்தால் பாதாளத்தில் வீழ்ந்த இந்த நாட்டை பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வந்து சவாலுக்கு உட்படுத்தாமல் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்