பணத்துடன் காணாமல் போனவர் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்-

 

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாப்பாகடவெவ மஹியங்கனை பகுதியில், கடந்த 3ம் திகதி வீட்டில் இருந்து நான்கு லட்சம் ரூபாய் பணத்துடன் மாடு பிடிப்பதற்காக ரிதிமாலியெத்த பிரதேசத்திற்கு சென்று வீடு திரும்பவில்லை என 4 ம் திகதி மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மஹியங்கனை பொலிஸாரும், ரிதிமாலியத்த பொலிஸாரும் இணைந்து தேடுதலை மேற்கொண்ட போது ரிதிமாலியத்த உலுல்ல தெஹிகம பிரதேசத்தில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் குறித்த நபரின் உந்துருளி மீட்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தேடுதலை மேற்கொண்ட போது நீரோடைக்கு அருகாமையில் புதைக்கப்பட்ட நிலையில் குறித்த நபரின் சடலமும் மேலும் ஒரு இடத்தில் புதைக்கப்பட்ட நிலையில் வாள் ஒன்றும் கையடக்கத் தொலைபேசி ஒன்றும் கைப்பையும் மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 37 வயதுடைய ரிதிமாலியத்த உலுல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் அவ்விடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் மஹியங்கனை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்படும் எனவும், சந்தேக நபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்