நான் தவறு என்றால் என்னை தூக்கிலிடுங்கள், ஒரு கொசுவை கூட நான் கொல்லவில்லை! – முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க

தனது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றது மன்னிக்க முடியாத தவறு என்றால் தன்னை தூக்கிலிடுமாறு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

விமலவீர திசாநாயக்கவின் பெயரில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முப்பது இலட்சம் ரூபா விடுவிக்கப்பட்டமை தொடர்பில் வெளியான செய்திகள் தொடர்பிலேயே மேற்கண்டவாறு அவர் வேதனையுடன் கூறினார்.

தனக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக சத்திரசிகிச்சை காரணமாக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணத்தினை தான் பெற்றுக்கொண்டது உண்மை .அதனை நான் ஒரு போதும் மறைக்க தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஏழை அரசியல்வாதியான நான் சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யவே ஜனாதிபதி நிதியில் இருந்து ரூபா 30 லட்சம் பெற்றேன். அந்த 30 லட்சமும் எனது வங்கிக் கணக்கிலோ அல்லது எனது குடும்பத்தினரின் வங்கிக் கணக்கிலோ வரவு வைக்கப்படவில்லை

எனது சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வத்தளையிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு தான் அந்தப் பணம் நேரடியாக ஜனாதிபதி செயலகத்தால் செலுத்தப்பட்டது. இந்த 30 லட்சம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு போதாது என்பதும் பலருக்கும் தெரியும்.

கடைசியாக, அறுவை சிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் மருத்துவமனையில் இருந்தபோது, ​​மருத்துவமனை கட்டணம் மட்டும் 1 கோடி 10 இலட்சம் ரூபாவாகும். எனது காரை விற்றதன் மூலமே அந்தக் கட்டணத்தைக் வைத்தியசாலைக்கு செலுத்தினேன்.

நான் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பெற்ற காசுக்காக எல்லாரும் கூச்சல் போடுகிறார்கள். ஆனால் நான் தலையிட்டு எத்தனை நோயாளர்களுக்கு ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் பெற்றுக்கொடுத்துள்ளேன்.

நான் பாராளுமன்ற உறுப்பினராக வந்து ஒரு மோசடியை கூட செய்தவன் அல்ல. குறைந்த பட்சம் ஒரு கொசுவை கூட நான் கொல்லவில்லை.

அப்படிப்பட்ட எனக்கு இப்படி பணத்தை நோய்க்காக கொடுப்பது ஒரு கிரிமினல் குற்றம் என்றால், என்னை மக்களின் முன் தூக்கிலிடுங்கள் என்றார் .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்