நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து : மூவர் வைத்தியசாலையில்

-நுவரெலியா நிருபர்-

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியொன்று, நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளானதில் சாரதி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்து, நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

லொறி விபத்துக்குள்ளானதுடன் லொறியிலிருந்த எரிபொருள் வீதியெங்கும் வழிந்தோடியதால், வீதி வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதாகவும் எனவே சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன் எரிபொருள் வழிந்தோடிய பகுதிகளுக்கு மண் மற்றும் மணலால் நிரப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவ்விபத்தில் லொறி கடுமையாக சேதமடைந்துள்ளதுடன்,விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.