நாட்டை மீட்க நிரந்தர கொள்கையொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும்

 

-கல்முனை நிருபர்-

இனவாத நிகழ்ச்சி நிரலுக்காக இலங்கை வாழ் சிறுபான்மை மக்களின் தனியார் உரிமைகள், உடமைகள் மீது கைவைக்க எந்த இலங்கையரும் அனுமதிக்க மாட்டார்கள். பிழையான இனவாத தீர்மானங்களே இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட சகல வளமுமிக்க எமது நாட்டை அந்நிய நட்புறவு நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் முஸ்தபா தெரிவித்தார்.

அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் 18வது வருடாந்த பொதுக்கூட்ட நிகழ்வுகள் நடத்துவது தொடர்பில் கல்முனையில் இடம்பெற்ற மீஸானின் செயற்குழு மற்றும் பணிப்பாளர்கள், பிரிவு செயலாளர்கள் பேரவை உறுப்பினர்களுடனான கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தேசப்பற்றுள்ள நாட்டின் மீது அக்கறை கொண்ட சிவில் அமைப்புக்கள் பொறுப்புடன் நடக்கவேண்டிய காலம் கனிந்துள்ளது. இலங்கையில் உள்ள மக்களின் வாழ்வியலையும், வாழ்வாதாரத்தையும் சிதைக்கும் பல்வேறு இனவாத அரசியல் காய் நகர்த்தல்கள் இலங்கையில் இப்போது இடம்பெற்றுவருகின்றது.

தமிழர்களின், முஸ்லிங்களின் காணிகள் பறிபோனது போன்று இப்போது உரிமைகள் கூட பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் கைவைக்க பல்வேறு நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளது கவலையளிக்கிறது.

பூர்விக காணிகள் கூட பல்வேறு காரணங்களை கூறி சுரண்டுகிறார்கள். பேரின இனவாத இயக்கங்கள் கூட இப்போது வெளிப்படையாக தலைகாட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

நாட்டின் நலனில் அக்கறை கொண்ட ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இலங்கையர்களாக ஒன்றித்து வாழும் மக்களிடையே பிரிவினைவாதத்தை உருவாக்கி நாட்டை சீரழித்து மீண்டும் நாட்டை பின்னோக்கி தள்ள எத்தனிக்கும் சக்திகளுக்கு தொடர்ந்தும் இடமளிக்க விடக்கூடாது.

இறைவன் வழங்கிய அருட்கொடையான எமது நாட்டின் வளங்களை முறையாக பயன்படுத்தும் கொள்கையொன்றை அவசரமாக அரசாங்கம் வகுக்க வேண்டும். அதன்மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும்,  என்றார்.