நாட்டிற்கே முன்னுதாரணமாக செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட செயலகம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருளை மீதப்படுத்தும் நோக்கில் இன்று  புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் மாவட்ட செயலகத்திற்கு பொது போக்குவரத்து மற்றும் துவிச்சக்கர வண்டி மூலமாகவும் அலுவலகத்திற்கு சமூகமளித்தனர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளன.

எரிபொருள் விலை உச்சத்தைத் தொட்டுவிட்டது, அத்தியாவசியப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லாமல் நாட்டின் கடன் சுமை அதிகரித்துவிட்டது.

இந்நிலைமைகளுக்கு மத்தியில் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் எரிபொருளை மீதப்படுத்தி நாட்டிற்கு நம்மாலான பொருளாதார பங்களிப்பை வழங்க வேண்டியுள்ளதன் அடிப்படையில், பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் மூலம் அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையின் பிரகாரம், எரிபொருளை மீதப்படுத்தும் நோக்கில் வாராந்தம் ஒவ்வொரு புதன்கிழமையும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களை துவிச்சக்கரவண்டி மற்றும் பொதுப்போக்குவரத்தில் அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு  பணிப்புரை விடுக்கப்பட்டது.

அதற்கு அமைவாக இன்று புதன்கிழமை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அனைத்து உயரதிகாரிகளும், உத்தியோகத்தர்களும், பஸ்களிலும், துவிச்சக்கர வண்டியிலும், நடந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தமை, குறிப்பிடத்தக்கது.