நாட்டின் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை நாளை குறைவடைந்தாலும், நாளை மறுதினம் முதல் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த சில மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக 247 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மலையகத்தின் மேற்கு சரிவுகளில் பெய்து வரும் இடைவிடாத மழையால் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்துள்ளார்.
விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்ப ஆரம்பித்துள்ளதாகவும் , அதற்கு கீழே உள்ள லக்ஷபான நீர்த்தேக்கத்தில் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
தற்போது பெய்து வரும் மழையுடன் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிரம்பி வழிவதாகவும் இதனால், கெனியன், லக்ஷபான, நியூ லக்ஷபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர நீர் மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தியானது அதிகபட்ச திறனுடன் இடம்பெற்று வருவதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.