
தொடரும் காட்டு யானைகளின் தாக்கம்: வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் பலி
– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மிக நீண்ட காலமாக இருந்து காட்டு யானைகளின் தாக்குதல்களும், அட்டகாசங்களும் அதிகரித்த வண்ணமாகவே உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் போரதீவுப் பற்று பிரதே செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துக்சேனைக் கிராமத்திற்குள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு காட்டுயானைகள் புகுந்துள்ளன. அதனைக் கட்டுப்படுத்துவதற்காக அமைமையிலுள்ள வெல்லாவெளியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தன் காரியாலயத்திற்கு அக்கிராம மக்கள் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த அவ்வுத்தியோகஸ்த்தர்கள், யானைகளைக் அப்புறப்படுத்துவதற்கு முயன்றுள்ளனர். அதில் கட்டுப்படாத காட்டு யானை ஒன்று அவ் உத்தியோகத்தர்களை எதிர்த்து தாக்கியுள்ளது.
இச்சம்பவத்தில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வெல்லாவெளியில் காரியாலயத்தில் கடமை புரிந்து வந்த நுவரெலியாவைச் சேர்ந்த 30 வயதுடைய செல்வராஜ் சிறிதரன் எனும் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு உத்தியோகத்தர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போரதீவுப் பற்று பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக விருந்து இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகளும் அதிகரித்துள்ள இந்நிலையில் அப்பகுதி மக்களின் வீடுகள், மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட பயிரினங்களையும் துவம்சம் செய்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.