திருமலையில் கேரளா கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது
-திருமலை நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை இன்று மாலை 96 ஆம் கட்டை கண்டி திருகோணமலை பிரதான வீதியின் பாலத்தடியில் வைத்து கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலை தலைமையகப் பொலிஸில் கடமையாற்றி வரும் 54 வயதுடையவர் எனவும் , இவர் முள்ளிப்பொத்தானை 10ஆம் கொலனியை வசிப்பிடமாகவும் கொண்டவருமாவார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஒரு கிலோ கேரளா கஞ்சா பொதியுடன் இவரை கைது செய்துள்ளனர். குறித்த கஞ்சா பொதியினை கைமாற்றுவதற்காக கொண்டு சென்ற போது கைதாகியதாக தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் தம்பலகாமம் பொலிஸில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நாளை வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்