“செல்போன் டவரை” திருடும் கும்பலை மடக்கி பிடித்த பொலிசார்

செல்போன் கோபுரத்தை (டவர்) கழற்றி இரும்பு உட்பட இதர பொருள்களை திருடி விற்பனை செய்து வந்த 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை – தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வைத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள், 2 மோட்டார் சைக்கிள் மற்றும் பொருட்கள் ஏற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம்- விளாத்திகுளம் பொது சாலையில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்த செல்போன் டவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் ஜிடிஎல் என்ற நிறுவனத்திடம் விற்கப்பட்டதாக தெரியவருகின்றது.

இந்தநிலையில் டவரின் செயல்பாடுகள் சிலமாதங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இதனை குறிவைத்து , டவரில் இருந்த பேட்டரி மற்றும் ஜெனரேட்டர் ,உள்ளக பாகங்கள், வயர்கள் அடிக்கடி திருட்டு போய் வந்துள்ளது தொடர்பாக ஏற்கனவே பொலிசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சிந்தலக்கரை பகுதியில் வாகன சோதனையில் பொலிசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பொலிசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சி செய்துள்ளார். பொலிசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்திய போது , கழுகாசலபுரத்தில் உள்ள செல்போன் டவரில் பொருள்களை திருடிய கும்பலில் ஒருவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இவர் கொடுத்த தகவலின் படி திருட்டி ஈடுபட்ட ஏனையோரை கைது செய்தனர்.

இன்னும் சில தினங்கள்; டவர் முழுவதும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கும் என பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.