‘செருப்பால் அடித்து அனுப்புவோம்’ என திட்டிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அரச உத்தியோகத்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.
பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு முன்னரும், அரச ஊழியர்கள் நேற்று முன்தினம் தொடக்கமும் வரிசையில் நின்று பெற்றோலை கொள்வனவு செய்துகொண்டிருந்தனர்.
இதன்போது திடீரென 20ற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னுக்கு சென்று பெற்றோல் நிரப்புவதற்கு முற்பட்டனர்.
இதனால் பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பொலிஸாருடன் முரண்பட்டனர், இதனால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அங்கு கடமையில் இருந்த பொலிஸார் பெற்றோல் நிரப்புவதற்கு வந்திருந்த பொலிஸாரை முன்னே அழைத்துச் சென்று எரிபொருள் நிரப்புவதற்கு வழிசெய்து கொடுத்தனர்.
அதற்கு பின்னர் வந்த பொலிஸார் கர்ப்பிணி தாய்மாரின் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பி சென்றனர்.
இதற்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் பொலிஸாருக்கு பூரணமான அனுமதியை வழங்கியதுடன் விரைவில் அவர்களுக்கு பெற்றோலையும் வழங்கினர்.
ஊடகவியலாளர் ஒருவர் ‘ஊடகவியலாளர்களுக்கு விசேடமான ஒதுக்கீடு ஏதாவது உள்ளதா?’ என எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பிய ஊழியரை வினவிய வேளை ‘ஊடகவியலாளர்களுக்கு செருப்பால் தான் அடித்து அனுப்புவோம்’ எனக் கூறினார்.
இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அவதானித்துக்கொண்டிருந்தனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தினரதும், அத்துமீறி பெற்றோலை பெற்றுச் சென்ற பொலிஸாரின் செயற்பாடுகளையும் அவதானித்த மக்களும் அரச உத்தியோகத்தர்களும் விசனம் தெரிவித்தனர்.