செம்மணி விவகாரத்தில் என் கருத்தை எனது தலைமை ஏற்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேற தயங்கமாட்டேன்!

-யாழ் நிருபர்-

மாநகர சபை மற்றும் நகரசபை சட்டத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தக் கோரி வடக்கின் உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபுவிடம் மகஜர் ஒன்று கையளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வடக்கு மாகாண அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான உமாச்சந்திர பிரகாஸ் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

மாநகர சபை மற்றும் நகரசபை சட்டத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றோம். இது தமிழ் பேசும் மக்களுக்கான மொழி உரிமையை உறுதிசெய்யும் ஒரு முக்கிய சட்டமாக இருக்கின்றது.

ஆனால் இன்றுவரை அதற்கான தீர்வு கிடைக்காமையால் மீண்டும் இதை வலியுறுத்தி கடிதம் வடக்கின் உள்ளூராசி ஆணையாளரிடம் கையளித்துள்ளோம்.

1897 ஆம் ஆண்டு உருவாக்கப்பட சட்டமானது இன்றுவரை திருத்தப்படாத ஒன்றாக இருக்கின்றது. பல வருடங்கள் நடைமுறையில் உள்ள மாநகர சபை சட்டத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட வேண்டும்.

குறிப்பாக இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய சட்டங்களை சமகால தேவைக்கமைய வகுக்கும்போது, மாநகர சபைக் கட்டளைச் சட்டம், நகர சபைக் கட்டளைச் சட்டம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது அவசியம்.

இதனால் மாநகர சபைகள் மற்றும் நகரசபைகளின் சட்டங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது, தமிழ் பேசும் மக்களின் சட்ட உரிமைகளை உறுதி செய்வதோடு, அவர்களின் சட்ட விழிப்புணர்வையும் அதிகரிக்கும்.

இது உள்ளூராட்சி மன்றங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதற்கும், அதில் பங்கேற்பதற்கும் உதவும் என நமுகின்றேன்.

எனவே, மாநகர சபை மற்றும் நகரசபை சட்டத்தை தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் அவசியமானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தமிழ் மக்களின் உணர்வுகளுடன் ஒன்றினைந்த ஒரு விடயம்.

இவ்விடையத்தில் பாதிக்கப்பட மக்களுக்கு தீர்வு வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

அந்தவகையில் செம்மணி விவகரத்தில் நான் கூறும் அல்லது வெளிப்படுத்தும் கருத்தை எனது தலைமை ஏற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனது கருத்தை நிராகரிக்கும் நிலை உருவானால் கட்சியை விட்டு வெளியேறவும் தயங்கமாட்டேன், என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.