எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலப்படுத்தப்படும் இராணுவ பாதுகாப்பு
-மட்டக்களப்பு நிருபர்-
இலங்கை கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் இல்லாத அளவிற்கு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது.
மின்சாரம், உணவு மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.
நாளாந்தம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் எரிபொருளிற்காக வரிசையில் நிற்கும் நிலையில், நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த நிலைமையினால் அரசாங்கம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பிற்காக படையினரை குவித்து வருகின்றது.
மேலும், கொழும்பில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால், ஆத்திரமடைந்த மக்கள் பிரதான வீதிகளை மறித்ததையடுத்து, அரசு படையினரை நிலைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த, நாட்டின் சிரேஷ்ட பிரஜைகள் சிலர் அண்மையில் உயிரிழந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
எரிவாயு கப்பல் இரண்டு இந்த வாரம் அளவில் நாட்டை வந்தடையவுள்ளதனால், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எரிவாயு தட்டுப்பாட்டை குறைக்க முடியும், என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக மூன்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, ஐக்கிய தேசிய சுயதொழில் சம்மேளனத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி
இந்த வாரம் எரிபொருளை பெற்றுக்கொள்ள இரண்டு கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கு தேவையான நிதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை இருவாரங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாங்கள் சியாம் காஸ் நிறுவனத்துடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கிறோம். லாஃப்ஸ் கேஸின் 30 வீத விற்கப்படாத பங்கு எங்களைப் பெரிதும் பாதிக்கிறது. எனவே, இம்மாத இறுதிக்குள் நிலமை வழமைக்கு திரும்பும்.’
ஐக்கிய தேசிய சுயதொழில் சம்மேளனத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ்
நாங்கள் இன்று ஆறாவது தடவையாக லிட்ரோ நிறுவனத்திக்கு வந்துள்ளோம். நாங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தொடர்ச்சியாக லிட்ரோ நிறுவனம் தொடர்பில் முறைப்பாடு அளித்து வந்துள்ளோம்.
குறித்த நிறுவனத்தில் ஒரு எரிவாயுவிற்கு 406 ரூபாய் மோசடி மற்றும் 12.5 லிட்டர் எரிவாயு சிலிண்டரின் கொள்ளளவை குறைக்கப்பட்ட போதும் முறைப்பாடுகளை பதிவிட்டோம்.
நாங்கள் நிறுவனத்திற்கு எதிராக இதுவரையில் மூன்று தடவைகள் முறைப்பாடுகளை அளிக்கப்பட்ட போது இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி
சந்தையில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதால், கறுப்பு சந்தை தோற்றம் பெறுகின்றது.
நிறுவனம் என்ற வகையில் விநியோக முறையை சரியாக பேணவேண்டியுள்ளது.
சந்தைக்கு எரிவாயுவை சரியாக விநியோகிக்கின்ற போது கறுப்புச் சந்தை இல்லாமல் போகும்.
எங்களுக்கு சிறிது காலம் தேவைப்படுகின்றது அடுத்த இரண்டு வாரங்களில் எமது விநியோகத்தை சரிசெய்ய முடியும்.
என தெரிவித்துள்ளனர்.