ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் channel-4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டது :உண்மைக்கு புறம்பானது

கன்சீர் அசாத் மௌலானா என்பவர் தனது தனிப்பட்ட அரசியல் புகலிடக் கோரிக்கைக்காக எங்களை வீழ்த்துவதற்கு காத்திருந்த அந்நிய சக்திகளுக்கு துணை நிற்கும் விதமாக ஈஸ்டர் குண்டு தாக்குதல் குறித்து எம்மையும் தொடர்புபடுத்தி உண்மைக்கு புறம்பான முறையில் அளித்த வாக்குமூலத்தையும், அதனையொட்டியதாக channel 4 தொலைக்காட்சி நிறுவனத்தால் சித்தரித்து வெளியிடப்பட்ட காணொளியையும் இன்றைய தினம் நானும் பார்த்திருந்தேன்.

உண்மையிலேயே ஐரோப்பாவில் இயங்கி வரும் இவ்வாறான ஒரு ஊடகம் உண்மையை சரிவர ஆராயாமல் மக்களை குழப்பி திசைதிருப்பும் வண்ணமாக உண்மைக்கு புறம்பான இச்செய்திகளை வெளியிட்டிருப்பது மனதிற்கு மிகவும் கவலையளிக்கின்றது.

மேலும் கன்சீர் அசாத் மௌலானா என்பவர் நான் முதலமைச்சராக இருந்த காலம் முதல் எம்மோடு இணைந்து அலுவலகம் சார்ந்த செயற்பாடுகளில் இயங்கி வந்த ஒருவர்.

சாதாரணமாக புலம்பெயர் நாடுகளில் புகலிடக் கோரிக்கையினை முன்வைப்பவர்கள் எம்மையும் எமது கட்சியினையும் விமர்சித்து தமது புகலிட கோரிக்கையினை உறுதிப்படுத்துவது வழமை. இருந்தபோதிலும் இவர் என்னுடன் இணைந்து பணியாற்றியதன் காரணமாக இன்னும் சற்று ஆழமாக சென்று குறித்த உண்மைக்கு புறம்பான செய்திகளை தத்துருவமாக சித்தரித்து தனது புகலிட கோரிக்கையினை உறுதிப்படுத்தியுள்ளார் என்பதுவும், தனக்கு பின் நின்று இந் நிகழ்ச்சி நிரலை ஒழுங்கு செய்த அந்நிய சக்திகளையும் தனவந்த கும்பல்களையும் திருப்திப்படுத்தியுள்ளார் என்பதுவும் தெளிவாகின்றது.

நான் கடந்து வந்த பாதைகளில் இவ்வாறான வஞ்சகத்தனத்திற்கும் துரோகத்திற்கும் பஞ்சம் இல்லை என்பதனை பல தடவைகள் நேரடியாகவே உணர்ந்துள்ளேன்.மேலும் அக்காணொளியின் கருப்பொருளாக சித்தரிக்கப்படுவது ஈஸ்டர் குண்டு தாக்குதலானது ஆட்சி மாற்றத்திற்கான ஒரு யுத்தியாகவே காண்பிக்கப்படுகிறது. அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதனை அரசியலில் சாதாரண அறிவு கொண்டவர்கள் கூட நன்கு அறிவார்கள்.

ஏனெனில் ஈஸ்டர் குண்டு தாக்குதலானது 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நடத்தப்பட்டிருந்தது. ஆனால் 2018 ஆரம்பத்திலேயே இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது அமோக வெற்றி பெற்று தனது பெரும்பான்மையை நிலை நிறுத்தியிருந்தது. அவ்வாறான ஒரு நிலையில் இவ்வாறான ஒரு மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்த வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்திருக்காது என்பதனை சாதாரண மக்களாலும் உணர முடியும்.

அவ்வாறு கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவானது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றி மிகவும் பலமான நிலையில் இருந்த போதுதான் அவர்கள் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டு மிகப் பிரம்மாண்டமான வெற்றியினை பெற்றிருந்தார்கள்.

அத்தோடு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஈஸ்டர் குண்டு தாக்குதலானது மிகக் கொடூரமானதும் மிலேச்சத்தனமானதும் கூட எனவே அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அதி உச்சபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். ஆகவே கன்ஸீர் அசாத் மௌலானாவும் கூட தானும் நேரடியாக குறித்த சம்பவத்துடன் தொடர்பு பட்டவர் போன்று கருத்துக்களை வெளியிட்டுடிருப்பதனை அவதானிக்க முடிகின்றது. ஆகவே குறித்த விசாரணையின் கீழ் அவரும் உள்வாங்கப்பட வேண்டும் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படை வாத பயங்கரவாதிகளால் மிகவும் வன்மமான முறையில் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அறிந்திராதவர்களுக்கு இவ் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எதுவித ஐயப்பாடுகளும் இல்லை.

மேலும் அதிகளவான புத்திஜீவிகளையும் செல்வந்தர்களையும் கொண்டு இயங்கும் இஸ்லாமிய கடும்போக்குவாத ஐ.எஸ்.ஐ. எஸ் அமைப்பின் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உண்மையான குற்றவாளிகளை தப்பிக்கச் செய்வதற்கான ஓர் முயற்சியாக இருக்குமோ என்கின்ற ஐயப்பாடும் எமக்கு வலுப்பெற்றுள்ளது.

அத்துடன் இக்கதையுடன் பிரதானமாக தொடர்புபடுத்தப்படும் ராணுவப் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலே குறித்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவத்தின் போது இலங்கை நாட்டில் இருக்கவில்லை என்றும், அவர் வெளிநாட்டில் இருந்தார் என்றும், 2018 ஜனவரி முதல் குறித்த தாக்குதல் சம்பவம் இடம் பெறும் வரை அவர் இலங்கையின் பாதுகாப்பு கடமையில் செயல்படவில்லை எனவும் தமது channel4 தொலைக்காட்சிக்கு தெரியப்படுத்தியுள்ளதாக குறித்த channe4 நிறுவனமே அக் காணொளியில் வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் என்னையும் ராஜபக்ச குடும்பத்தையும் குறித்த காணொளி தொடர்பில் channel4 நிறுவனம் தொடர்பு கொள்ள முற்பட்ட போது நாங்கள் அதனை மறுத்திருந்ததாகவும் மிகவும் அப்பட்டமான போலிச் செய்தியினை வெளியிட்டுள்ளது.

இதற்க்கு முன்னரும் channel4 நிறுவனமானது ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் வேறுபட்ட காணொளி ஒன்றினை வெளியிட்டிருந்தது. எனினும் தற்போது கன்சீர் அசாத் மௌலானாவின் புகலிட கோரிக்கையினை மையப்படுத்தி ஒரு காணொளியினை வெளியிட்டுள்ளது.

எனவே ஊடகங்கள் தமது ஊடக தர்மத்தினை கடைப்பிடித்து செய்திகளை ஆராய்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதனை தவிர்க்க வேண்டும் என்பதனையும் இவ்விடத்தில் வலியுறுத்துகின்றேன்.

ஆகவே எமது கட்சியினை நம்புகின்ற மக்களுக்கும் அக் காணொளியினை பார்க்கின்ற மக்களுக்கும் எம்மை மழுங்கடிக்க நினைக்கும் எதிரிகளுக்கும் நான் கூறிக் கொள்ள விரும்புவது யாதெனில் இது ஒரு உண்மைக்கு புறம்பான செய்தி என்பதனையும் அதில் பெயர் குறிப்பிடப்படும் எனக்கோ அல்லது எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பு சார்ந்தவர்களுக்கோ நேரடியாகவும் சரி ,மறைமுகமாகவும் சரி குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் எதுவித தொடர்புகளும் இல்லை.