இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு. 1.2 மில்லியன் பெறுமதியான கல்வி புலமைப்பரிசில்கள்
க.பொ.த. (சாதாரண தரம்) பரிட்சையில் 9 ‘ஏ’ சித்திகளுடன் சிறந்து விளங்கிய இராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கான ரூ.1.2 மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில் உதவித்தொகைகள் ரணவிரு சேவா அதிகாரசபையினால் வழங்கி வைக்கப்பட்டது.
ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) அவர்களின் கருத்திட்டத்தின் அடிப்படையில் இன்று புதன் கிழமை கொழும்பு 03 கொள்ளுப்பிட்டியில் உள்ள ரணவிரு சேவா அதிகார சபையின் தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அதற்கமைய, ஒவ்வொரு மாணவருக்கும் மாதாந்த கல்வி உதவித் தொகையாக ரூ. 5,000 வழங்கப்பட்டது. இந்த உதவித் தொகையானது இரண்டு வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உதவித்தொகைகள் ஐக்கிய இராச்சியத்தின் பல்லின சமூக அமைப்பினால் வழங்கப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தின் வாழும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை உள்ளடக்கிய இந்த அமைப்பு, மேலும் 90 புலமைப்பரிசில்களை விரைவில் வழங்க உத்தேசித்துள்ளது.
இங்கு கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன, “உங்கள் தந்தையரின் தியாகத்திற்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த புலமைப்பரிசில்கள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன, நன்றாகப் படித்து எமது தாய்நாட்டிற்கு சேவை செய்வது உங்கள் பொறுப்பாகும்” எனத் தெரிவித்தார்.
மேலும், இம் மாணவர்கள் நாட்டின் பயனுள்ள குடிமக்களாகவும், நாட்டை கட்டியெழுப்பும் பணியில் ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ரணவிரு சேவா அதிகார சபையின் உன்னதமான சேவைகளை பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர், இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு உதவிவரும் அனுசரணையாளர்களுக்கும் இதன் போது நன்றி தெரிவித்தார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இரண்டு வருடகால புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், தற்போதைய ரணவிரு சேவா அதிகாரசபை தலைவரின் முயற்சியால் இதுவரை 8.2 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ரணவிரு சேவா அதிகாரசபையின் பணிப்பாளர் பிரிகேடியர் சன்ந்ரா அபேகோன் மற்றும் பயனாளிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.