இனவாத கருத்துக்களை வெளியிடுவதால் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும்

மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இனவாத செயற்பாடோ அல்லது பயங்கரவாத செயற்பாடோ அல்ல. இவ்வாறு இனவாத கருத்துக்களை வெளியிடுவதால் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்பதால் , அவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தீர்வினை வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளமையினால் , அந்த பொறுப்பை பாராளுமன்றம் நிறைவேற்ற வேண்டும், அதற்காக கட்சி பேதமின்றி , தேசிய இணக்கப்பாட்டுடன் நாம் செயற்பட வேண்டியுள்ளது என்றும்   சுட்டிக்காட்டியுள்ளார்.

மிரிஹான சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படாமையின் காரணமாக நேற்று இரவு மிரிஹான பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் அங்கு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது இதன் மூலம் இதுவரையில் காணப்பட்ட பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்தது.

இந்த சம்பவமானது தற்போதைய அரசியல் நடைமுறையின் வீழ்ச்சியாக மாற்றமடையக் கூடும். பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது, அதே போன்று எதிர்க்கட்சியும் தோல்வியடைந்துள்ளது.

இது இனவாத செயற்பாடு அல்ல. அதே போன்று இது பயங்கரவாத செயற்பாடும் அல்ல இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் இந்த நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும்.

மக்களின் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அரசியல் கட்சிகள் கலந்து கொள்ளக் கூடாது. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு தமது கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கான உரிமை காணப்படுகிறது அதற்காக கட்சி பேதமின்றி , தேசிய இணக்கப்பாட்டுடன் நாம் செயற்பட வேண்டியுள்ளது.

அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடும் போது நாம் இந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். எமது பிரச்சினைகளை வன்முறையின்றி அமைதியாக தீர்த்துக் கொள்வோம் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.