அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் குறித்து தெளிவுபடுத்தும் கூட்டம்

-நுவரெலியா நிருபர்-

தலவாக்கலை நகரில் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி நடைபெற உள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்று அக்கரப்பத்தனையில் இடம்பெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஆலோசனையின் பேரில் அவரது செயலாளர் பழனி விஜயகுமாரின் ஏற்பாட்டில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிர்வாக செயலாளருமாகிய பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் அக்கரப்பத்தனை பிரதேச அமைப்பாளர்கள் ஒருங்கிணைப்பு செய்த கூட்டத்தில் தோட்ட கமிட்டி தலைவர்கள் முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் யுவதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நாட்டுக்கு தற்போது அழிவை ஏற்படுத்தி இருக்கும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.