அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு எனக்கு பல முறை அழைப்பு விடுக்கப்பட்டது – ஹரீஸ் எம்.பி

-கல்முனை நிருபர்-

இன்று புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அமைச்சரவையில் அமைச்சுப் பொறுப்பு ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு அரச மேலிடங்களிலிருந்து மூன்று தடவைகள் உத்தியோகபூர்வ அழைப்புகள் விடுக்கப்பட்டன.

மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், மக்களின் பிரதிநிதி என்றவகையில் மக்கள் பக்கமாக நின்றே செயற்பட வேண்டும் என்று தீர்மானித்ததன் அடிப்படையில் அரச தரப்பின் அழைப்புகளை முற்றாக தான் நிராகரித்ததாக, முன்னாள் இராஜாங்க அமைச்சரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹாரீஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அமைச்சரவையில் தனக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்பு ஒன்றைத் தர தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதனை ஏற்றுக் கொள்ளுமாறு மூன்று தடவைகள் ஆளும் தரப்பு உயர்மட்டத்திலிருந்து எனக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன.

இருப்பினும் அவர்களின் அந்த அழைப்பை நான் நிராகரித்தேன். இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும் மற்றும் பல்வேறு வகையிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் எந்தவொரு அமைச்சுப் பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது என அவர்களிடம் எடுத்துரைத்தேன்.

நாட்டில் இன்று எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி அதனைத் தீர்க்க வேண்டும். மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் நான் மக்கள் பக்கமாக நின்றே செயற்படுவேன். இதேவேளை, எம்போன்றோர் தொடர்பில் இன்று பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன .

ஆனால் உண்மை நிலைமையை மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள், என்றும் அவர் மேலும் தெரிவித்தார் .

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24