மட்டக்களப்பில் மணல் அகழ்வதற்கு அனுமதி 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்படும் கனியவள மணல் அகழ்வுகளுக்கான அனுமதியினை சரியானதொரு பொறிமுறையின் கீழ் வழங்குவது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலானது, மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது.

கடந்த (16) திகதி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்ற போது மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்பாக விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பட்டவர்கள் முன்வைத்த முறைப்பாடுகளிற்கு அமைவாக குறித்த பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக உயர்மட்ட குழுவொன்றை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நிறுவுமாறு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி  கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக  நேற்றைய தினம் குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது வாய்க்கால்கள், வயல் காணிகள் திருத்துவதற்காக வழங்கப்படும் அனுமதியை வழங்கும் நிறுவனங்கள் முறையான வகையில் மேற்பார்வை செய்ய வேண்டியதன் அவசிய தன்மை, வனவள திணைக்களத்தினால் வழங்கப்படும் மணல் அகழ்வு அனுமதியினால் ஏற்படும் பாதக தன்மைகள், பாடசாலை வேளைகளில் மணல் ஏற்றும் வாகனங்களை தடுப்பது,  மட்டக்களப்பு கனிய வள திணைக்களத்தினால் முறையற்ற விதத்தில் வழங்கப்படும் மணலகழ்வு அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த கலந்துரையாடலின் போது விவசாய அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், மத்திய மற்றும் மாகாண நீர் பாசன திணைக்களம், வனவள திணைக்களம், பொலிஸ் திணைக்களம், கனியவள திணைக்களம் உள்ளிட்ட துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன், தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் தெரிவித்ததுடன், இந்த பிரச்சனைக்கான தீர்வை பெறும் முகமாக பிரதேச செயலக ரீதியாக பிரதேச செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டியதன் அவசியத் தன்மை தொடர்பாகவும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

அதனடிப்படையில் அனைவரது கருத்திற்கும் அனைவாக பிரதேச செயலக ரீதியாக குழு அமைக்கப்பட்டதுடன், அக்குழுவினால் சிபாரிசு வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து மாவட்ட மட்ட குழுவின் சிபாரிசின் அடிப்படையில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரம் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.