செம்மணி விவகாரத்தை தமிழ்த் தரப்பு மிக அவதானமாக கையாளவேண்டும் – ஈரோஸ் ஜனநாயக முன்னணி 

ஒரு இனத்தின் மீதான கொடுமைகள் நடைபெற்றகாலங்களில் அமைதியாக இருந்துவிட்டு மிகப்பெரிய இழப்பை சந்தித்த ஒரு சமூகம் நீதியை பெற்றுக்கொள்ள முனையும் போது அதை நீர்த்துப்போகச்செய்யும் முயற்சியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.  எனவே  இவ்விவகாரத்தை தமிழ்த் தரப்பு மிக அவதானமாக கையாளவேண்டும் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

செம்மணி விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி” இன்று சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கின்றது அங்கு தோண்டி எடுக்கப்படும் மனித எழும்புக் கூடுகள் தமிழ் மக்கள் மீதான படுகொலையை உறுதிப்படுத்துகின்றது. செம்மணி மனித புதைக்குழி அகழ்வுகள்  நீதிக்கான குரல் மீண்டும் ஓங்கி ஒலிக்கச்செய்துள்ளது.

மனித படுகொலைக்கும் வதைகளுக்கும் பேரவலத்திற்கும் உள்ளாக்கப்பட்ட ஒரு இனம், நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும்போது துணுக்காய் தொடர்பாகவும் குருக்கள் மடம் தொடர்பாகவும் பேச எத்தனித்திருப்பது செம்மணி விவகாரத்தை திசைதிருப்புவதற்கான, மூடிமறைப்பதற்கான அல்லது நீர்த்துப்போகச்செய்வதற்கான முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகின்றது. ஆகவே இவ்விவகாரத்தை தமிழ்த் தரப்பு மிக அவதானமாக கையாளவேண்டும்.

தமிழ்மக்களின் மூன்று தசாப்தகால விடுதலைப்போராட்டத்தில் சொல்லமுடியாத இழப்புகளை, வேதனைகளை, வதைகளையும் அனுபவித்துக்கொண்டிருந்ததை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. ஆனாலும் மீண்டும் மீண்டும் எமக்கான நீதியை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேசத்தையும் ஜெனிவாவையும் நம்புவதையும், நாடுவதையும் தவிர வேறுமார்க்கம்‌ தமிழர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. ஆகவே தான் இன்றும் செம்மணி விவகாரமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

மேலும் போராட்டக் காலத்தில் இனங்களுக்கிடையிலான, மதங்களுக்கிடையிலான, இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகளும் மோதல்களும் படுகொலைகளும் நடைபெறவே இல்லை என்று யாரும் சொல்லமுடியாது. மட்டக்களப்பு மாவட்டம் சத்துருக்கொண்டான் படுகொலை, அம்பாறை மாவட்டம் வீரமுனை படுகொலை, இப்படி பல்வேறு வெறுக்கத்தக்க சம்பவங்கள் எல்லாம் கடந்த காலங்களில் நடந்துள்ளதை மறக்கமுடியாது.

ஆனால் இவ்வளவு காலம் அமைதியாக இருந்துவிட்டு மிகப்பெரிய இழப்பை சந்தித்த ஒரு சமூகம் நீதியை பெற்றுக்கொள்ள முனையும் போது அதை நீர்த்துப்போகச்செய்யும் முயற்சியை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது எதிர்காலத்தில் இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து மனித படுகொலைகளுக்கும் நீதிவழங்கப்படவேண்டும் அது ஒரு சமூகத்தின் நீதிக்கான போராட்டத்தை எவ்விதத்திலும் மழுங்கடிப்பதாக இருந்துவிடக்கூடாது எனவும் தெரிவித்தார்.