மட்டக்களப்பு குருக்கள்மடம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் துறையடி வீதியில் இன்று மாலை வேளையில் தீச்சம்பவம் பதிவாகியுள்ளது.
பின்னர் மெது மெதுவாக பரவ ஆரம்பித்த தீ சரணாலயத்தினை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.  தீப்பரவலை  கட்டுப்படுத்துவதற்காக குருக்கள்மடம் வடக்கு கிராம சேவை அதிகாரி, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் ஊடாக  களுவாஞ்சிக்குடி பொலிஸாருடன் குருக்கள்மடம் முகாம் இராணுவத்தினர், பொதுமக்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பயனாக தீச்சம்பவம் பல்வேறு பிரேயத்தனங்களுக்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மட்டக்களப்பு குருக்கள்மடம் பறவைகள் சரணாலயம் கடந்த வருடம் 2024 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தில் முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக இது காணப்படுகிறது.இதே போல் கடந்த ஆண்டும் 27.09.2024 திகதியில் பாரியளவு  தீப்பரவல் குருக்கள்மடம் ஏத்தாலைக்குள பறவைகள் சரணாலயத்தில் நடந்தமை குறிப்பிடத்தக்கது.
குருக்கள்மடம் பறவைகள் சரணாலயம்  மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இப்பறவைகள் சரணாலயத்திற்கு இலட்ச கணக்கிலான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்தர்ப்பத்தில் பறவைகள் எதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பேராபத்து வராமல் பாதுகாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச் செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும், இவ்வாறு பாதுகாக்கப்பட்ட பிரதேசத்திற்குள் அனுமதி இன்றி உள் நுழைந்து , காட்டுத்தீயை ஏற்படுத்தியவர்கள், சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.